கட்டுரை

பிரதமரை முன்மொழிதல்

அவசரமா? அவசியமா?

அரசியல் செய்தியாளர்

இந்த கட்டுரையை எங்கே இருந்து தொடங்குவது?

 ராகுல்காந்தியே வருக, நல்லாட்சி தருக என்று கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் அவரைப் பிரதமராக முன் மொழிந்ததில் இருந்து தொடங்கலாமா?

 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கையிலேயே மத்திய அமைச்சராக இருந்த குஷ்வாஹா, பதவியை உதறிவிட்டு தன் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக்கிக் கொண்டதில் இருந்து தொடங்கலாமா?

அரசியல் விமர்சரான நண்பர் ஒருவர், 'இல்லை, இக்கட்டுரையானது 2019-ல் பாஜக மீண்டும் வெல்லவேண்டும் என்றால் நரேந்திர மோடிக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் நிதின் கட்காரியை முன்னிறுத்தவேண்டும் என்று மகாராஷ்டிரா விவசாயிகளின் முக்கியத் தலைவர் ஒருவர் சொன்னாரே அதில் இருந்து தொடங்கப்படவேண்டும்' என்கிறார்.

 நாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செய்யப்படும் அணி திரட்டல்களில் இருந்து தொடங்கலாம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 2014&ல் இடம்பெறாத திமுக இப்போது துண்டுபோட்டு இடம்பிடித்திருக்கிறது. அப்போது பாஜக அணியிலிருந்த தெலுங்கு தேசம் ஏற்கெனவே காங்கிரஸ் பக்கம் சேர்ந்துவிட்டது. முறுக்கிக் கொண்டிருந்த இடதுசாரிகள் மாநில அரசியல் அளவில் ஐமுகூட்டணிபக்கம் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாலுவின் ஆர்ஜேடி, கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஜே எம் எம், மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் என ராகுலின் தரப்பு அணி, களை கட்டிக்கொண்டிருக்கிறது.

 முக்கியமான மாநிலமும் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு 71 இடங்களை வாரித்தந்ததுமான உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடிக் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் விழித்துக்கொண்டு கூட்டணி வைக்க இருப்பதால் அங்கே பாஜகவுக்கு கடும் போட்டி இருக்கும். இந்த இரு கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணிக்கு தேர்தல் முடிந்தபின்னரே சூழ்நிலையைப் பொறுத்து வருவார்கள். உபியில் காங்கிரஸின் செல்வாக்கு மிகக் குறைவு என்பதால் இப்போதே எதற்காகக் கூட்டணியில் சேர்ந்து காங்கிரஸுக்கு சில இடங்களைக் கொடுக்கவேண்டும்? தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்பது அக்கட்சிகளின் திட்டம்.

ராகுல் காந்தி

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியும் இதே யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது. அங்கே 2014 ஆம் ஆண்டு 34 இடங்களில் அவர் ஜெயித்திருந்தார். இப்போதும் அவ்வளவு வெல்ல முடியும் என்று அவர் எதிர்பார்க்கிறார். எனவே அவர் அப்புறம் பார்க்கலாம் என்று திட்டம் வைத்துள்ளார். ஒதிஷாவில் பிஜு ஜனதா தளமும் இதே நிலைப்பாடுதான். நவீன் பட்நாயக் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் அணிக்குப் போவாரா? பாஜக அணிக்குப் போவாரா என்றால் பின்னதுக்குத்தான் போவார் என்பது எதிர்பார்ப்பு.

 இதற்கு இடையில் பாஜகவும் காங்கிரஸும் இல்லாத மூன்றாவது அணி ஒன்றை அமைப்போம் என்று டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். உபியின் இரண்டு பெரிய கட்சிகளும் அதற்கு இன்னும் தலையாட்டவில்லை. மம்தா பார்க்கலாம் என்று சொல்லி உள்ளார். நவீன் பட்நாயக் நிலைப்பாடும் அப்படியே. இப்படி ஒரு அணி அமைந்தால் மம்தா, நவீன், ராவ், அகிலேஷ், மாயாவதி ஆகியோர் இணையலாம். தேர்தலுக்குப் பின் அவர்கள் கையில் சுமாராக 100 எம்பிகள் வரை இருக்கலாம். அதை வைத்துக்கொண்டு, அமையவிருக்கும் புதிய ஆட்சியைத் தீர்மானிக்கலாம் என்று ராவ் திட்டமிடுகிறார்.

சமீபத்தில் நடந்த இந்தி பேசும் மூன்று முக்கிய மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கார் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பது அக்கட்சிக்குப் புதிய தெம்பை அளித்துள்ளது. 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாகப் பெற்றது 44 எம்பிகள்தான். இந்த  மூன்று மாநிலங்களின் வெற்றி இன்னும் கூடுதலாக 44 இடங்களைப் பெற்றுத்தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பெற இருக்கும் எம்.பி.களின் எண்ணிக்கையைக் கூட்டினால் ஓரளவுக்கு கணிசமான எண்ணிக்கையிலான எம்.பி.களைப் பெற்று மோடியின் செல்வாக்குக்கு சவால் விடலாம் என்று ராகுல்காந்தி கணக்குப் போடுகிறார்.

சரி... மோடியும் அமித் ஷாவும் சும்மா இருப்பார்களா? கடந்த முறை ஐமுகூட்டணிக்குப் பெரும் சவாலாக விளங்கியது நரேந்திர மோடியின் பெருமளவிலான மக்கள் செல்வாக்கு. அதனால் முன் எப்போதும் இல்லாத அளவிலான 282 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. தேஜ கூட்டணி 336 இடங்களை வென்றது. ஆனால் இந்த தேர்தலில் அதே செல்வாக்கு இருக்கிறதா? அதே அளவுக்கு வெல்ல முடியுமா? என்றால் கேள்விக்குறிதான். மோடி எடுத்த துணிச்சலான முடிவுகளான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்திய வழிமுறை போன்றவை மக்கள் மத்தியில் இந்த ஐந்தாண்டு முடிவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன? விவசாயிகள், தொழிலதிபர்கள், நடுத்தரவர்க்கம் என்ன நினைக்கிறார்கள்? ஆகிய கேள்விகள் முக்கியமானவை. ஆனால் இன்றும் மோடி இந்திய அளவில் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றாராகத்தான் இருக்கிறார். இதை எதிர்கொள்வதுதான் ஐமுகூட்டணிக்கே பெரும் சவாலாக இருக்கும் என்று கணிக்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். ஆனால் மாநில அளவிலான கூட்டணி மாறுதல்கள், காங்கிரஸ் பெற்றிருக்கும் மூன்று மாநில வெற்றி ஆகியவை ஐமுகூட்டணிக்குக் கைகொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன என்பதும் உண்மை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஸ்டாலின், ராகுல்காந்தியை இந்தக் கட்டத்தில் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்திருக்கவேண்டாம் என்பது பொதுக்கருத்து. கூட்டணி பேரத்தை காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் திமுக எப்படி நடத்தும் என்பதை இது பாதிக்கக்கூடும் என்பதால் ஏன் முன்கூட்டியே தனக்கான வாய்ப்புகளை திமுக சுருக்கிக்கொள்ளவேண்டும் என்பதும்தான் இங்கு விவாதிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி

2014 தேர்தலில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை வென்றது அதிமுகதான். 37 இடங்கள். ஆனால் எந்த பிரயோசனமும் தமிழ்நாட்டுக்கு இல்லை. ஜெ. மறைவுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழலால் திமுக அதிக இடங்களைப் பெறும் நிலை ஏற்படும்போது, அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள காய்களை சரியாக நகர்த்தவேண்டிய நிலையில் திமுக உள்ளது. பிற மாநிலக் கட்சிகள் ஸ்டாலினின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி இருப்பது, மாநிலக் கட்சிகளின் ஆட்சியே மத்தியில் அமையவேண்டும் என்று அவை விரும்பும் அரசியல் சூழலைக் காண்பிக்கிறது. கர்நாடக மாநிலத்தை எடுத்துக்கொண்டால் அதிக இடங்களை காங்கிரஸ் பெற்றிருந்தாலும் குறைவான இடங்களைப் பெற்ற குமாரசாமியைத்தான் முதல்வர் ஆக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த மாநிலத்தில் ஏற்பட்ட நிலையை பிற மாநிலக் கட்சிகள் கூர்ந்து கவனித்தன. மாநிலக் கட்சிகள் இணைந்து மத்திய ஆட்சியைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படுமானால் அந்த நிலையை திமுகவும் பயன்படுத்திக்கொள்வதே அக்கட்சியின் கொள்கை அடிப்படையில் சரியாக அமையும். அதிமுக&பாஜக கூட்டணியில் தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ இணையும் வாய்ப்புகளே தெரிகின்றன. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் பாஜக அணியிலும் கமல்ஹாசன் காங். அணியிலும் இடம்பெறும் வாய்ப்புகளே உள்ளன.

பாஜகவில் நிதின் கட்காரி, சமீபத்தில் அமித்ஷாவை விமர்சித்தது பெருமளவில் கவனம் பெற்றது. அது தேர்தலுக்குப் பின்னால்தான் விளைவுகளை ஏற்படுத்தும். இப்போதைக்கு மோடி& ஷா கூட்டணி பாஜகவில் அசைக்கமுடியாத தலைமையே.

 இன்னும் நாட்கள் நெருங்க நெருங்க ‘பல தரமான சம்பவங்களை' நாம் பார்க்கப்போகிறோம்!

ஜனவரி, 2019.